Saturday, December 4, 2010

மேயற மாட்டை நக்குற மாடு கெடுத்ததாம்

தாய்மொழி அறியாத
தலைமுறை ஒன்றிங்கு
தலைவரை உணர்ந்து எழும்

அன்றுதான்
தக தக தக தக
தக தக தக வென
தமிழினம் உயர்ந்து எழும்

_ அண்ணன் அறிவுமதி

                      நான் பாடம் நடத்திய பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர் ஒருவர் பிறப்பால் தமிழர். ஆனால், அவர் பத்து, பதினொன்று வயது வரை வளர்ந்ததெல்லாம் மராத்தியத்தில் தான். அவருக்கு இந்தியும் தமிழும் (பேச மட்டும்) தெரியும். அவர் கொஞ்சம் குறும்புக்காரர்.
                     தமிழ்ப் பாடவேளையின் போது ஆர்வமின்மையால் மற்ற மாணவர்களுடன் பேசிக் கொண்டேயிருப்பார். நான் அவரைக் கண்டிக்கும் விதமாக ‘மேயற மாட்டை நக்குற மாடு கெடுத்ததாம்’ அது போல நீ யாரையும் கெடுக்காதே என்று கூறினேன்.
                     அதைக்கேட்டு அவர் சொன்னதைக் கேட்ட நான் அதிர்ச்சியடைந்தேன். அவர், ‘Sir, punch dialogue சொல்லாதீங்க’ என்றார். நான், ‘தம்பி, அது punch dialogue இல்ல, பழமொழியடா’ என்றேன்.
                      மறுநாள் வகுப்பிற்குச் சென்றபோது மாணவர், ‘சார் நீங்க என்னை ஏன் இவ்வளவு மோசமா திட்டுனீங்க’ என்று கோபமாகக் கேட்டார். நான், ‘தம்பி, ஏன் இவ்வளவு கோபம். நான் ஏதும் தப்பா சொல்லலையே’ என்றேன். அதற்கு அவர் சொன்னதைக் கேட்டு நான் மேலும் அதிர்ச்சியடைந்தேன்.
                      நான் சென்றபின், அப்பழமொழியைப் பற்றி வேறொரு மாணவரிடம் ( நன்றாகத் தமிழ் தெரிந்தவர் ) கேட்டாராம். அதற்கு அவர், ‘பசு மாடு மேய்ந்து கொண்டிருக்கும் போது காளை மாடு அதன்பின்னால் சென்று அதை நக்கிக் கெடுத்துவிடும்’ என்றாராம்.
                     நான் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியுமா? நான் இருவருக்கும் தக்க விளக்கம் கொடுத்தேன்.

இதிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள்:
  • .தாய்மொழி அறியாத தலைமுறை ஒன்று வள்ர்ந்து வருகிறது.
  •  அவர்களைத் தவறாக வழி நடத்தும் தலைமுறை ஒன்றும் வளர்ந்து வருகிறது
எனது கேள்வி:
  •  இது யார் குற்றம்? சிந்திப்பீர்.
எனது வேண்டுகோள்:
  •  நாம் குழந்தைகளுக்கு முதலில் தாய்மொழியைக் கற்றுக் கொடுப்போம்.
  • திரைப்படம், தொலைக்காட்சி பார்த்துக் கற்றுக் கொடுப்பதைத் தவிர்ப்போம்.
  • மொழி பயன்பாட்டில் உண்டாகும் பிழை நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூடு.

1 comment:

  1. உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன்

    http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_22.html

    ReplyDelete