Tuesday, December 14, 2010

மகாகவியும் சூப்பர் ஸ்டாரும்

11-12-2010 நான் வகுப்புக்குச் சென்றபோது, மாணவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புருண்டைகளைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியோடு இருந்தார்கள்.

“தம்பி, உங்களில் யாருக்காவது பிறந்த நாளா?”

“இல்லை ஐயா”

“ஏன் இந்தக் கொண்டாட்டம்? மகாகவியை நினைவு கூர்ந்தீர்களா? பாரதி என்றால் அவ்வளவு பிடிக்குமா?”
.
“ஐயா, பாரதியார் இன்றுதான் பிறந்தாரா? எங்களுக்குத் தெரியாதே”

“அப்படியென்றால்.. வேறு என்ன விசேஷம்?”

“ஐயா, உங்களுக்கு இது கூட தெரியாதா? நாளைக்கு ‘தல’க்குப் பிறந்த நாள்”
( ‘தல’ என்பது அஜீத்திற்கு முன் ரஜினி)

எனக்கும் இனிப்பு தந்தார்கள். நான் வாங்கிக் கொள்ளவில்லை. ஏனென்றால், அறிஞர் அண்ணா எழுதிய ‘உலக உத்தமர் காந்தியடிகள் (எட்டாம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்)’ கட்டுரையைப் படித்ததில் இருந்து நான் எவருடைய பிறந்த நாளையும் கொண்டாடுவதில்லை. அதுவும் ஒரு நடிகனின் பிறந்த நாளை...? ஏன் இத்தனை? என் பிறந்த நாளையே கொண்டாடுவதில்லை.

“உங்களுள் எத்தனை பேருக்கு உங்கள் தாய் தந்தையரின் பிறந்த நாட்கள் தெரியும்?”

எவரும் பதில் கூறவில்லை. இரண்டொருவரைத் தவிர. பிறகு அவர்களுக்கு அறிவுரை கூறியது தனி.

இது ஏதோ ஒரு பள்ளியில், வகுப்பில் நடந்ததாக என்னால் எண்ண முடியவில்லை. எனக்கு ரஜினியை நடிகனாக, தந்தையாக, நல்ல மனிதராகப் பிடிக்கும். ஆனால், மாணவர்களுக்கும் பிடிக்கலாம். தவறில்லை. இந்த வயதில் இது தேவையா? 

பாட நூலிலுள்ள வினாவுக்கு விடையாக வருகின்ற ஒரு நாள் தெரியவில்லை (பாரதியார் குறிப்பு வரைக). பாரதியாரைக் கவிஞராக விடுத்து, தேர்வில் மதிப்பெண் பெறுவதற்காகவாவது படித்திருக்கலாம். இல்லையே..!
ரஜினியின் அண்மைக்காலப் பேட்டிகளைப் படித்தால், சமூகத்தில் தன்னுடைய இடம், சமூகத்தின் மீது இருக்கிற அக்கறை ஆகியவற்றை மிகப் பொறுப்புடன் பதிவு செய்திருப்பதை அறிய முடிகிறது.

ஆனால்.., ரசிகர்கள்....? அதுவும் இளஞ்சிறார்கள்?

அடுத்து, ஒரு நடிகனின் பிறந்த நாளைக் கொண்டாடும் சமூகம், 

‘எனக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்’ என்று கூறி, வாழ்ந்தும் காட்டிய மகாகவியின் பிறந்த நாளை மறந்தது ஏன்? 

அண்மைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த கவிஞனைப் பற்றியே மறந்து விட்டோம். பிறகுஎப்படி, 

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி’ இவற்றையெல்லாம் எப்படி நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறோம்? மீட்டெடுக்கப் போகிறோம்? 

எண்ணிப் பாருங்கள், எனதருமை சொந்தங்களே..!

வாழ்க ரஜினி..!  வளர்க பாரதியின் புகழ்....!!

நான் கேட்ட நந்தலாலா

                     அண்மையில் நந்தலாலா படம் பார்த்தேன். முதலில் மிஷ்கினுக்குக் கனமான கை குலுக்கல், கூடவே அந்தச் சிறுவனுக்கும்.
                     இதுவரை தமிழ்த்திரையில் ஒலிக்காத நந்தலாலா என்றெல்லாம் கூற முடியாது. ஆனால் படம் அருமை. என்னை வெகுவாகவே பாதித்தது.


சிறப்பம்சங்கள்:
  • மிஷ்கின், சிறுவன், லாரி டிரைவர், மாற்றுத்திறனாளி, பள்ளிக்கூட மாணவி ஆகியோரின் நடிப்பு.
  • ஒளிப்பதிவு. மகேஷ் முத்துசாமி.
  • காட்சியமைப்புகள்
  • கதையோட்டம்
  • வசனங்கள் (சில இடங்களில்); வசனமின்மை (சில இடங்களில்)
  • பாடல்கள் நிறைய இல்லாமை
  • ஸ்னிக்தாவைக் கவர்ச்சியாகக் காட்டாதது
  • மணிமுடியாக இசைஞானியின் இசைப் பிரவாகம்
பிடிக்காதவை:
மிஷ்கினுக்குக் கேள்விகளாக.., 
  • ஏன் உங்கள் படங்களில் முதன்மை பாத்திரங்கள் எல்லாம் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்? 
  • ஏன் இத்தனை நாட்களாகப் படத்தை வெளியிடவில்லை? 
  • ஏன் ஒவ்வொரு படத்திற்கும் இவ்வளவு இடைவெளி
இன்னும் எத்தனையோ ஏன்? கள்.....

        அடுத்து இப்படம் ஏதோ ஜப்பானியப் படத்தின் தழுவல் என்றும், சாதாரண ரசிகர்களுக்குப் புரியாது என்பது போன்ற தோற்றத்தை ஊடகங்கள் உண்டாக்கி வைத்திருக்கின்றன. எல்லோருக்குமே புரியுமே.
        வெறும் அடிதடி, ஆபாசம், வெட்டுக்குத்து, குத்துப்பாட்டு, நாராசமான நகைச்சுவை என்று மட்டுமே பார்த்து வெறுத்துப் போயிருக்கும் ரசிகர்களின் ரசனையை மாற்றுங்கள். அதற்கு இம்மாதிரி படங்களை அனைவரும் பார்க்கும் விதமாக ஊக்கப்படுத்துங்கள்.

மேலும், மிஷ்கினுக்குத் தனி ஷொட்டு. பாரதியாரின் கவிதை வரிகளையே தொடர்ந்து தன் படங்களுக்குத் தலைப்பாக வைப்பதற்கு. தொடரவும்.

நந்தலாலா நலந்தரும் இசை......

ஏக்கங்கள் ஏராளம்

ஏக்கங்கள் ஏராளம்

ஏங்கியிருக்கிறேன் நானும்
சில இடங்களில்
சில நேரங்களில்...

இன்னும்
சில நிமிடங்களாவது
வாழ மாட்டோமா எனக்
கடைசி நிமிடத்தில்
நினைக்கும்
தூக்குத் தண்டனைக்
கைதியைப் போல...

நினைவை எங்கோ
நீந்த விட்டுவிட்டு
கனவுலகில் வகுப்பைக்
கவனிக்கும் மாணவர்கள்
மணியோசைக்காகக்
காத்திருப்பதைப் போல...

தூரத்தில் இருந்தாலும்
நினைவுகளை மட்டும்
நெருக்கமாக்கிக் கொண்டு
அயல் நாட்டில்
அலுவலுக்குச் சென்ற
கணவன் திரும்பும்
நாளை எதிர் நோக்கும்
இளம் மனைவியைப் போல...

வர மாட்டாளா
வந்து உயிர் தர மாட்டாளா
வளம் கொழிக்காதா என்று
காவிரியைக் கருத்திற்கொண்டு
வறண்ட நிலத்தை
வலம் வரும்
தமிழகத்து விவசாயியைப் போல...

ஏங்கியிருக்கிறேன் நானும்
சில இடங்களில்
சில நேரங்களில்...

Saturday, December 4, 2010

எழுத்துக் காதல்

எழுத்துக் காதல்

மெய்யெழுத்தாய்
மெய்மறந்துக் கிடந்த
என்னுடன் புணர்ந்து
உயிரூட்டிய
உயிரெழுத்தே...!
நாமிருவரும்
உயிர்மெய்யாய்
இணைந்து விட்டோம்
இடையில்
எங்கிருந்து வந்தது...?
சாதியெனும்

ஆய்த எழுத்து...

தெருவோர மதில்கள்

தெருவோர மதில்கள்
அன்றாடமும் அநாதைகளாய்
அலைந்து திரியும்
நகர்ப்புறத்து ஆடுமாடுகளுக்கெல்லாம்
நானும் ஒருவகையில்
அட்சயப் பாத்திரமே...

அரசியல் கட்சிகளின்
அரங்கேற்ற அவலங்கள்
கட்டிளங் காளையரின்
காதல் வெளிப்பாடுகள்
சிரிப்பாய்ச் சிரிக்கும்
சினிமா போஸ்டர்கள்
இன்னும் இன்னும்
எத்தனை எத்தனையோ
கிறுக்கல்கள் என்மீது...

எவன் மீதோ உள்ள கோபத்தை
என்மீது காட்டினான் ஒருவன்
எச்சிலைத்துப்பி...

என்னையே என்னால்
பாதுகாத்துக் கொள்ள
முடியாத நிலையில்
அடுத்தவர்களுக்கும்
அரணாக நான்...

அறிவிப்பு செய்யாதே என
என்மீதே
அறிவிப்பு செய்கிறார்கள்...

மேயற மாட்டை நக்குற மாடு கெடுத்ததாம்

தாய்மொழி அறியாத
தலைமுறை ஒன்றிங்கு
தலைவரை உணர்ந்து எழும்

அன்றுதான்
தக தக தக தக
தக தக தக வென
தமிழினம் உயர்ந்து எழும்

_ அண்ணன் அறிவுமதி

                      நான் பாடம் நடத்திய பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர் ஒருவர் பிறப்பால் தமிழர். ஆனால், அவர் பத்து, பதினொன்று வயது வரை வளர்ந்ததெல்லாம் மராத்தியத்தில் தான். அவருக்கு இந்தியும் தமிழும் (பேச மட்டும்) தெரியும். அவர் கொஞ்சம் குறும்புக்காரர்.
                     தமிழ்ப் பாடவேளையின் போது ஆர்வமின்மையால் மற்ற மாணவர்களுடன் பேசிக் கொண்டேயிருப்பார். நான் அவரைக் கண்டிக்கும் விதமாக ‘மேயற மாட்டை நக்குற மாடு கெடுத்ததாம்’ அது போல நீ யாரையும் கெடுக்காதே என்று கூறினேன்.
                     அதைக்கேட்டு அவர் சொன்னதைக் கேட்ட நான் அதிர்ச்சியடைந்தேன். அவர், ‘Sir, punch dialogue சொல்லாதீங்க’ என்றார். நான், ‘தம்பி, அது punch dialogue இல்ல, பழமொழியடா’ என்றேன்.
                      மறுநாள் வகுப்பிற்குச் சென்றபோது மாணவர், ‘சார் நீங்க என்னை ஏன் இவ்வளவு மோசமா திட்டுனீங்க’ என்று கோபமாகக் கேட்டார். நான், ‘தம்பி, ஏன் இவ்வளவு கோபம். நான் ஏதும் தப்பா சொல்லலையே’ என்றேன். அதற்கு அவர் சொன்னதைக் கேட்டு நான் மேலும் அதிர்ச்சியடைந்தேன்.
                      நான் சென்றபின், அப்பழமொழியைப் பற்றி வேறொரு மாணவரிடம் ( நன்றாகத் தமிழ் தெரிந்தவர் ) கேட்டாராம். அதற்கு அவர், ‘பசு மாடு மேய்ந்து கொண்டிருக்கும் போது காளை மாடு அதன்பின்னால் சென்று அதை நக்கிக் கெடுத்துவிடும்’ என்றாராம்.
                     நான் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியுமா? நான் இருவருக்கும் தக்க விளக்கம் கொடுத்தேன்.

இதிலிருந்து நாம் பெறும் படிப்பினைகள்:
  • .தாய்மொழி அறியாத தலைமுறை ஒன்று வள்ர்ந்து வருகிறது.
  •  அவர்களைத் தவறாக வழி நடத்தும் தலைமுறை ஒன்றும் வளர்ந்து வருகிறது
எனது கேள்வி:
  •  இது யார் குற்றம்? சிந்திப்பீர்.
எனது வேண்டுகோள்:
  •  நாம் குழந்தைகளுக்கு முதலில் தாய்மொழியைக் கற்றுக் கொடுப்போம்.
  • திரைப்படம், தொலைக்காட்சி பார்த்துக் கற்றுக் கொடுப்பதைத் தவிர்ப்போம்.
  • மொழி பயன்பாட்டில் உண்டாகும் பிழை நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் சூடு.

Wednesday, December 1, 2010

பேச்சாளரின் காதல் கடிதம்

பேச்சாளரின் காதல் கடிதம்
அன்பார்ந்த காதலியாரே....
------------------------ 
இதற்குமேல் எழுத முடியவில்லை....?!
ஏனென்றால்.....
யாரும் கைத்தட்டவில்லை.

குடியாட்சி

குடியாட்சி

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னெல்லாம்
மதுவருந்தச் செல்வர் எம்மக்கள்
ஐந்தாறு கல்தொலைவு தாண்டி....

இன்றோ ....
இரண்டு கல்லிடையில்
ஒருகடையுண்டு எம் குடிமக்களுக்கு..!

ஆனால்..,

இன்றைக்கும்
ஐந்தாறு கல்தாண்டியே செல்கின்றனர்
எம்மக்கள் மேல்நிலைப் பள்ளிக்கு...

குடியாட்சியாம் குடியாட்சி
நல்ல குடியாட்சி....

மொழிப்பற்று

மொழிப்பற்று
அன்புடை அம்மாவோ Mummy 
ஆசை  அப்பாவோ Daddy
அழகு மனைவியோ My Dear
அருமை மகனோ Son
பாசமிகு மகளோ Daughter
------------  ---------------  ------------
------------  ---------------  ------------
காலை எழுந்தவுடன் Good morning
பல்துலக்காமல் பருகிட Bed coffee
பற்கள் பளீச்சிட Tooth paste
நீராடப் பூசுவது Bar soap
உண்ணும் உணவெல்லாம் Chinese food
-----------  -------------  --------------
-----------  -------------  --------------
இன்னும் இன்னும் தொடருமே
அன்றாட வாழ்வில் ஆங்கிலமே!
என்னே தமிழா! மொழிப்பற்று
எழுடா தமிழா! விழிப்புற்று.