Thursday, March 20, 2014

விநோதங்கள்

எனக்குள்

நானே தேடுகிறேன்
உன்னுள் தொலைத்து விட்ட
என்னை...

உனக்கென்ன
நீ என்னவோ
உளறிவிட்டாய்
நானல்லவா நிற்கிறேன்
நீருக்குள் நெருப்பாய்...


- இராச. மோகன் தாஸ்.

Monday, September 5, 2011

மீண்டும் வேண்டும் விடுதலை

மீண்டும் வேண்டும் விடுதலை
வேண்டும் வேண்டும்
மீண்டும் வேண்டும்
மீளாத்துயர் நீக்க
வாளாய் வேண்டும் விடுதலை...

வேண்டும் வேண்டும்
மீண்டும் வேண்டும் விடுதலை...

கண்ட கண்ட பொருளையெல்லாம்
கரியாக்க எரியூட்டிப்
பூமித்தாயின்
போர்வைப் படலத்தில்
போட்டான் ஒரு ஓட்டை
புக முடியாத
புற ஊதா நடத்துகிறது வேட்டை...

ஆதியிலிருந்து 
வெப்பந்தணிந்து
தட்பமடைந்த
இப்புவிதனை மீண்டும்
வெப்பமயமாக்கிய
தப்புகளிடமிருந்து
வேண்டுமொரு விடுதலை...

அணுவைத் துளைத்து
அதிலேழ் கடலைப் புகட்டலாமென்ற
அவ்வையின் கண்டுபிடிப்பை
ஆய்ந்து சொன்ன அறிவியலும்
அணுசக்தி ஆக்கமேயென்றது...

அளப்பரிய சக்தியென
அறிந்த மனிதன்
அறியாமை ஆணவத்தால்
அழிவுப்பாதைக்கு
அழைத்துச் சென்றான்
அறிவியலை...

கண்ணால் காண முடியா
அணுவைக் கொண்டு
அச்சுறுத்தி ஆளும்
ஆட்சியாளர்களிடமிருந்து
வேண்டுமொரு விடுதலை...

உள்ளங்கையில் உலகம்
விரல்சொடுக்கில் விரியும் விந்தைகள்
பார்த்துக் கொண்டே பேசலாம்
படுத்துக் கொண்டும் பேசலாம்...

வரலாற்றில் பெரும்புரட்சி
வரைந்தனர் அறிவியலார்
உலகமே வியக்க
அலைக்கற்றை ஒதுக்கீட்டில்
ஊழலைச் செய்தனர் அறிவிலார்...

ஊழலற்ற நாடமைய
ஊக்கமுற்ற தலைவன் அமர
வேண்டுமொரு விடுதலை...

கல்பனா சாவ்லா
சுனிதா வில்லியம்ஸ்
இந்திரா நூயி
இவர்களைப் போல
இன்னுமின்னும் எத்தனையோ
இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள்...

ஆனாலும்,
தடைதாண்ட முடியாமல்
கடை நிலையிலேயே
கனவுகளை அழித்து வாழும்
கன்னியர் அனேகரும்
கட்டுண்டு கிடக்கிறார்கள்...

அவர்களின்
அடிமைத் தளையறுக்க
வேண்டுமொரு விடுதலை...

இன்னும்...

அடுக்கிக் கொண்டே செல்லலாம்
அவனியிலுள்ள அவலங்களை...

உண்ணும் உணவிலும் 
கலந்துவிட்டது செயற்கை
அழிவின் விளிம்பில் நின்று
அழுகிறது இயற்கை...

விளை நிலங்களெல்லாம்
வீட்டுமனைகளாயின
நீராறுகளெல்லாம் 
மணலாறுகளாயின...

இயற்கையோடு இயைந்து
இன்பமுற்று வாழ்ந்த மனிதன்
இழைத்து விட்ட தீங்கிற்காக
இன்பமற்று வாழ்கிறான்...

இவற்றில் இருந்தெல்லாம்
வருங்காலம் விடுபட்டு
வளமான வாழ்வு வாழ
வேண்டுமொரு விடுதலை...

வேண்டும் வேண்டும்
மீண்டும் வேண்டும் விடுதலை...

இளிவரல்

முன்னிருக்கையில் நீ
பின்னிருக்கையில் நான்...

உனதிடை தொடும்
எனது கரப்பூ

செல்லச் சிணுங்கல்களோடு
மெல்ல ஓட்டி வருகையிலே
இலை மலர்களைத் தூவி
கிளைக் கரங்களை அசைத்து
ஒலியெழுப்பி மகிழும்
புளிய மரங்கள்....

முன்னிருக்கையில் நான்
பின்னிருக்கையில் நீ

வெவ்வேறு வாகனங்களில்
இருவேறு மனிதர்களோடு..?

அன்றிலிருந்து
இன்றுகூட எனைப் பார்த்து
மலர்த்தூவிக் கரம் அசைத்தன
பலமரங்கள் சாலையிலே...

ஆனால்,

கைமறித்துக் காரித்துப்பி
கைக்கொட்டி ஏளனஞ்செய்து
இழிசொல் பேசுவதாகவே
பழிகொண்டதென் பாழ்மனம்...

Thursday, July 28, 2011

தூரம்

உண்ணுகின்ற உணவில்
உறுத்தும் விதமாய்
உருவொன்று கிடந்துவிட்டால்
உதறி எழுந்திடுவேன்
உதறியும் வீசிடுவேன்...

ஆனால்,

கல் தொலைவு பல
கடந்துவந்த வேளையில்
கட்டி வந்துண்ணும்
கட்டுச்சோற்றில் கிடந்த மயிர்
கண்ணீரை வரவழைத்தது...

மன்னித்துவிடு தாயே...

Wednesday, February 9, 2011

கலைந்து விட்ட கனவு

அவள்  தந்த முத்தத்தின்
ஈரம்கூட காயவில்லை...

அணைப்பிலிருந்து
விடுபடவே முடியவில்லை...

கட்டிலின் கால்களோ
நர்த்தனம் ஆடுகின்றன...

எங்கள் கால்களோ
எழுப்புகின்றன அனலை...

நாங்கள் இருவரும்
ஒன்றோடு ஒன்றாகும் போது
விழுந்து விட்டேன்
கட்டிலில் இருந்து
நான் மட்டும்...

புரிதல் இல்லாப் பிரிதல்

புரிதல் இல்லாப் பிரிதல்
நீ என்னைப்
புரிந்து கொள்ளாத போதெல்லாம்
ஏதோ பாடத்தைப்
புரிந்து கொள்ளாத மாணவன்மீது
ஆசிரியருக்கு வரும் கோபம்தான்
உன்மீது எனக்கும்....

பாடத்தைப் புரியவைக்க
முயற்சிக்கும்
ஆசிரியரைப் போலத்தான்
நான் உன்னுடன் போடும்
சண்டையெல்லாம்....

Tuesday, December 14, 2010

மகாகவியும் சூப்பர் ஸ்டாரும்

11-12-2010 நான் வகுப்புக்குச் சென்றபோது, மாணவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புருண்டைகளைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியோடு இருந்தார்கள்.

“தம்பி, உங்களில் யாருக்காவது பிறந்த நாளா?”

“இல்லை ஐயா”

“ஏன் இந்தக் கொண்டாட்டம்? மகாகவியை நினைவு கூர்ந்தீர்களா? பாரதி என்றால் அவ்வளவு பிடிக்குமா?”
.
“ஐயா, பாரதியார் இன்றுதான் பிறந்தாரா? எங்களுக்குத் தெரியாதே”

“அப்படியென்றால்.. வேறு என்ன விசேஷம்?”

“ஐயா, உங்களுக்கு இது கூட தெரியாதா? நாளைக்கு ‘தல’க்குப் பிறந்த நாள்”
( ‘தல’ என்பது அஜீத்திற்கு முன் ரஜினி)

எனக்கும் இனிப்பு தந்தார்கள். நான் வாங்கிக் கொள்ளவில்லை. ஏனென்றால், அறிஞர் அண்ணா எழுதிய ‘உலக உத்தமர் காந்தியடிகள் (எட்டாம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்)’ கட்டுரையைப் படித்ததில் இருந்து நான் எவருடைய பிறந்த நாளையும் கொண்டாடுவதில்லை. அதுவும் ஒரு நடிகனின் பிறந்த நாளை...? ஏன் இத்தனை? என் பிறந்த நாளையே கொண்டாடுவதில்லை.

“உங்களுள் எத்தனை பேருக்கு உங்கள் தாய் தந்தையரின் பிறந்த நாட்கள் தெரியும்?”

எவரும் பதில் கூறவில்லை. இரண்டொருவரைத் தவிர. பிறகு அவர்களுக்கு அறிவுரை கூறியது தனி.

இது ஏதோ ஒரு பள்ளியில், வகுப்பில் நடந்ததாக என்னால் எண்ண முடியவில்லை. எனக்கு ரஜினியை நடிகனாக, தந்தையாக, நல்ல மனிதராகப் பிடிக்கும். ஆனால், மாணவர்களுக்கும் பிடிக்கலாம். தவறில்லை. இந்த வயதில் இது தேவையா? 

பாட நூலிலுள்ள வினாவுக்கு விடையாக வருகின்ற ஒரு நாள் தெரியவில்லை (பாரதியார் குறிப்பு வரைக). பாரதியாரைக் கவிஞராக விடுத்து, தேர்வில் மதிப்பெண் பெறுவதற்காகவாவது படித்திருக்கலாம். இல்லையே..!
ரஜினியின் அண்மைக்காலப் பேட்டிகளைப் படித்தால், சமூகத்தில் தன்னுடைய இடம், சமூகத்தின் மீது இருக்கிற அக்கறை ஆகியவற்றை மிகப் பொறுப்புடன் பதிவு செய்திருப்பதை அறிய முடிகிறது.

ஆனால்.., ரசிகர்கள்....? அதுவும் இளஞ்சிறார்கள்?

அடுத்து, ஒரு நடிகனின் பிறந்த நாளைக் கொண்டாடும் சமூகம், 

‘எனக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்’ என்று கூறி, வாழ்ந்தும் காட்டிய மகாகவியின் பிறந்த நாளை மறந்தது ஏன்? 

அண்மைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த கவிஞனைப் பற்றியே மறந்து விட்டோம். பிறகுஎப்படி, 

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி’ இவற்றையெல்லாம் எப்படி நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறோம்? மீட்டெடுக்கப் போகிறோம்? 

எண்ணிப் பாருங்கள், எனதருமை சொந்தங்களே..!

வாழ்க ரஜினி..!  வளர்க பாரதியின் புகழ்....!!