Tuesday, December 14, 2010

மகாகவியும் சூப்பர் ஸ்டாரும்

11-12-2010 நான் வகுப்புக்குச் சென்றபோது, மாணவர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புருண்டைகளைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியோடு இருந்தார்கள்.

“தம்பி, உங்களில் யாருக்காவது பிறந்த நாளா?”

“இல்லை ஐயா”

“ஏன் இந்தக் கொண்டாட்டம்? மகாகவியை நினைவு கூர்ந்தீர்களா? பாரதி என்றால் அவ்வளவு பிடிக்குமா?”
.
“ஐயா, பாரதியார் இன்றுதான் பிறந்தாரா? எங்களுக்குத் தெரியாதே”

“அப்படியென்றால்.. வேறு என்ன விசேஷம்?”

“ஐயா, உங்களுக்கு இது கூட தெரியாதா? நாளைக்கு ‘தல’க்குப் பிறந்த நாள்”
( ‘தல’ என்பது அஜீத்திற்கு முன் ரஜினி)

எனக்கும் இனிப்பு தந்தார்கள். நான் வாங்கிக் கொள்ளவில்லை. ஏனென்றால், அறிஞர் அண்ணா எழுதிய ‘உலக உத்தமர் காந்தியடிகள் (எட்டாம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்)’ கட்டுரையைப் படித்ததில் இருந்து நான் எவருடைய பிறந்த நாளையும் கொண்டாடுவதில்லை. அதுவும் ஒரு நடிகனின் பிறந்த நாளை...? ஏன் இத்தனை? என் பிறந்த நாளையே கொண்டாடுவதில்லை.

“உங்களுள் எத்தனை பேருக்கு உங்கள் தாய் தந்தையரின் பிறந்த நாட்கள் தெரியும்?”

எவரும் பதில் கூறவில்லை. இரண்டொருவரைத் தவிர. பிறகு அவர்களுக்கு அறிவுரை கூறியது தனி.

இது ஏதோ ஒரு பள்ளியில், வகுப்பில் நடந்ததாக என்னால் எண்ண முடியவில்லை. எனக்கு ரஜினியை நடிகனாக, தந்தையாக, நல்ல மனிதராகப் பிடிக்கும். ஆனால், மாணவர்களுக்கும் பிடிக்கலாம். தவறில்லை. இந்த வயதில் இது தேவையா? 

பாட நூலிலுள்ள வினாவுக்கு விடையாக வருகின்ற ஒரு நாள் தெரியவில்லை (பாரதியார் குறிப்பு வரைக). பாரதியாரைக் கவிஞராக விடுத்து, தேர்வில் மதிப்பெண் பெறுவதற்காகவாவது படித்திருக்கலாம். இல்லையே..!
ரஜினியின் அண்மைக்காலப் பேட்டிகளைப் படித்தால், சமூகத்தில் தன்னுடைய இடம், சமூகத்தின் மீது இருக்கிற அக்கறை ஆகியவற்றை மிகப் பொறுப்புடன் பதிவு செய்திருப்பதை அறிய முடிகிறது.

ஆனால்.., ரசிகர்கள்....? அதுவும் இளஞ்சிறார்கள்?

அடுத்து, ஒரு நடிகனின் பிறந்த நாளைக் கொண்டாடும் சமூகம், 

‘எனக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்’ என்று கூறி, வாழ்ந்தும் காட்டிய மகாகவியின் பிறந்த நாளை மறந்தது ஏன்? 

அண்மைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த கவிஞனைப் பற்றியே மறந்து விட்டோம். பிறகுஎப்படி, 

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி’ இவற்றையெல்லாம் எப்படி நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறோம்? மீட்டெடுக்கப் போகிறோம்? 

எண்ணிப் பாருங்கள், எனதருமை சொந்தங்களே..!

வாழ்க ரஜினி..!  வளர்க பாரதியின் புகழ்....!!

2 comments:

  1. பதிவு, சிந்தனையைத் தூண்டியது;
    மாணவர்களை மட்டுமல்ல;
    மாணவர்களின் பெற்றோரையும்தான்!

    ReplyDelete