Monday, September 5, 2011

மீண்டும் வேண்டும் விடுதலை

மீண்டும் வேண்டும் விடுதலை
வேண்டும் வேண்டும்
மீண்டும் வேண்டும்
மீளாத்துயர் நீக்க
வாளாய் வேண்டும் விடுதலை...

வேண்டும் வேண்டும்
மீண்டும் வேண்டும் விடுதலை...

கண்ட கண்ட பொருளையெல்லாம்
கரியாக்க எரியூட்டிப்
பூமித்தாயின்
போர்வைப் படலத்தில்
போட்டான் ஒரு ஓட்டை
புக முடியாத
புற ஊதா நடத்துகிறது வேட்டை...

ஆதியிலிருந்து 
வெப்பந்தணிந்து
தட்பமடைந்த
இப்புவிதனை மீண்டும்
வெப்பமயமாக்கிய
தப்புகளிடமிருந்து
வேண்டுமொரு விடுதலை...

அணுவைத் துளைத்து
அதிலேழ் கடலைப் புகட்டலாமென்ற
அவ்வையின் கண்டுபிடிப்பை
ஆய்ந்து சொன்ன அறிவியலும்
அணுசக்தி ஆக்கமேயென்றது...

அளப்பரிய சக்தியென
அறிந்த மனிதன்
அறியாமை ஆணவத்தால்
அழிவுப்பாதைக்கு
அழைத்துச் சென்றான்
அறிவியலை...

கண்ணால் காண முடியா
அணுவைக் கொண்டு
அச்சுறுத்தி ஆளும்
ஆட்சியாளர்களிடமிருந்து
வேண்டுமொரு விடுதலை...

உள்ளங்கையில் உலகம்
விரல்சொடுக்கில் விரியும் விந்தைகள்
பார்த்துக் கொண்டே பேசலாம்
படுத்துக் கொண்டும் பேசலாம்...

வரலாற்றில் பெரும்புரட்சி
வரைந்தனர் அறிவியலார்
உலகமே வியக்க
அலைக்கற்றை ஒதுக்கீட்டில்
ஊழலைச் செய்தனர் அறிவிலார்...

ஊழலற்ற நாடமைய
ஊக்கமுற்ற தலைவன் அமர
வேண்டுமொரு விடுதலை...

கல்பனா சாவ்லா
சுனிதா வில்லியம்ஸ்
இந்திரா நூயி
இவர்களைப் போல
இன்னுமின்னும் எத்தனையோ
இந்தியப் பெண்கள் இருக்கிறார்கள்...

ஆனாலும்,
தடைதாண்ட முடியாமல்
கடை நிலையிலேயே
கனவுகளை அழித்து வாழும்
கன்னியர் அனேகரும்
கட்டுண்டு கிடக்கிறார்கள்...

அவர்களின்
அடிமைத் தளையறுக்க
வேண்டுமொரு விடுதலை...

இன்னும்...

அடுக்கிக் கொண்டே செல்லலாம்
அவனியிலுள்ள அவலங்களை...

உண்ணும் உணவிலும் 
கலந்துவிட்டது செயற்கை
அழிவின் விளிம்பில் நின்று
அழுகிறது இயற்கை...

விளை நிலங்களெல்லாம்
வீட்டுமனைகளாயின
நீராறுகளெல்லாம் 
மணலாறுகளாயின...

இயற்கையோடு இயைந்து
இன்பமுற்று வாழ்ந்த மனிதன்
இழைத்து விட்ட தீங்கிற்காக
இன்பமற்று வாழ்கிறான்...

இவற்றில் இருந்தெல்லாம்
வருங்காலம் விடுபட்டு
வளமான வாழ்வு வாழ
வேண்டுமொரு விடுதலை...

வேண்டும் வேண்டும்
மீண்டும் வேண்டும் விடுதலை...

இளிவரல்

முன்னிருக்கையில் நீ
பின்னிருக்கையில் நான்...

உனதிடை தொடும்
எனது கரப்பூ

செல்லச் சிணுங்கல்களோடு
மெல்ல ஓட்டி வருகையிலே
இலை மலர்களைத் தூவி
கிளைக் கரங்களை அசைத்து
ஒலியெழுப்பி மகிழும்
புளிய மரங்கள்....

முன்னிருக்கையில் நான்
பின்னிருக்கையில் நீ

வெவ்வேறு வாகனங்களில்
இருவேறு மனிதர்களோடு..?

அன்றிலிருந்து
இன்றுகூட எனைப் பார்த்து
மலர்த்தூவிக் கரம் அசைத்தன
பலமரங்கள் சாலையிலே...

ஆனால்,

கைமறித்துக் காரித்துப்பி
கைக்கொட்டி ஏளனஞ்செய்து
இழிசொல் பேசுவதாகவே
பழிகொண்டதென் பாழ்மனம்...